தோப்பில் முஹம்மது மீரானின் “துறைமுகம்”

http://pitchaipathiram.blogspot.com/2009/01/blog-post_20.html

மீரான் தனது புதினங்களில் தொடர்ந்து உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கும் குமரி மாவட்டத்து கடற்கரை கிராம இசுலாமிய சமுதாயத்தினரின் காட்சிப்பரப்பு இந்தப் புதினத்திலும் தொடர்கிறது. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு நிகழும் களத்தின் பின்னணியில் மூட நம்பிக்கைகளை தங்களது மூளைகளில் அப்பிக் கொண்டிருக்கும் அறியாமையில் உழலும் இசுலாமியர்கள். காந்தி என்றொருவர் இந்தியா என்ற நாட்டின் சுதந்திரத்திற்காக ஒரு போராட்டத்தினை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்ற தங்களின் சமகால வரலாற்று நிகழ்வுகளின் எதிரொலி கூட எட்டாத அறியாமையின் தொலைவில் இருப்பவர்கள். அப்படி ஒரளவு அறிந்தவர்களுக்குக் கூட காந்தியை விட இசுலாமியர் என்பதாலேயே ஜின்னாவின் மேல் பிரியம்.
“அவன் இப்பம் காங்கிரசாக்கும்”

“அப்படீண்ணா”

“காந்திக்கெ கச்சி. வெள்ளக்கானுவளெ வெரட்டனுமெண்ணு செல்லுத கச்சி”

“ஓஹோ அப்படியா சங்கதி?”

“அவன் காங்கிரசானதினாலே நம்மொ முஸ்லீம்களெல்லாம் லீக்காவணும்”

“அதென்னவா¡ர்க்கும் சங்கதி மனசிலாவல்லியே….”

“ஜின்னாக்கெ கச்சி”

“நல்ல மூளைதான் ஹபீபே, ஜின்னா நம்மொ இஸ்லாமான ஆளுதானா?”

“பின்னே பத்தரமாத்து”.

()

பத்திரிகை படித்தால் ஹராம், தலையில் முடி வைத்திருந்தால் ஹராம், காபிர்களைப் போல் ஆங்கிலம் படித்தால் ஹராம் என்று தங்கள் தலையில் தாங்களே மதத்தின் பெயரால் மண்ணை வாரிப் போட்டிக் கொண்டிருக்கும் அவர்களின் மத்தியில் காசிம் என்ற இளைஞனே ஒரளவு படித்தவன். படிப்பில் ஆர்மிருந்தாலும் வறுமை காரணமாக அவனது படிப்பு தட்டுத்தடுமாறி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவனின் ஆங்கிலப்படிப்பு காரணமாக ஊரார் அவன் தந்தை மீரான் பிள்ளையை அது குறித்து எச்சரிக்க, படிப்பு முற்றிலுமாக நின்று போய்விடுகிறது. ‘நான்தானே நரகத்துக்குப் போகப் போறேன். அதனால இவங்களுக்கு என்ன கஷ்டம், இந்திய சுதந்திரத்திற்குப் போராடிய ஆங்கிலம் படித்த மெளலானா முகம்மது அலியும் நரகத்துக்குப் போவாரா?…என்று அவனுக்குள் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாருமில்லை.

மீரான் பிள்ளை கொழும்புவிற்கு மீன்களை ஏற்றுமதி செய்து அவர்கள் அனுப்பப் போகும் பணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவியாபாரி. அங்கிருந்து வரும் கடிதத்தை படிப்பதற்கு கூட அவார் தனது மகனைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. கடலில் மீன்பாடு இல்லாததினால் கிராமமே வறுமையின் பிடியில் சிக்கியிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் முதலாளிமார்கள், கப்பல் சரக்குகள் மூழ்கிப் போய்விட்டன அல்லது வீணாகிப் போய்விட்டன அல்லது மார்க்கெட் விலை குறைந்துவிட்டது என்று தந்தியனுப்பி ஏமாற்றிவிடுகின்றனர். இவ்வாறு ஈனா பீனா கூனா முதலாளி போன்றவர்களின் துரோகத்தினால் அந்தக் கிராமத்தின் பல சிறுவியாபாரிகள் ஓட்டாண்டிகளாகி வறுமையில் தவிக்கின்றனர்.

காசிம் வீட்டை விட்டு வெளியேறி சுதந்திரப் போராட்த்தில் பங்கு பெறுகிறான். ஊருக்கு திரும்பி அவன் தலையில் முடி வைத்திருப்பதனால் ஊரார் கூடி அவனை மொட்டையடித்து அவமானப்படுத்த விரும்புகின்றனர். ஊரே அவன் அவமானப்படுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது காலரா பரவுகிறது. பலர் இறந்து போகின்றனர். பரீது பிள்ளை முதலாளி காணாமற் போகின்றார். காசிம் எங்கிருந்தோ அழைத்துக் கொண்டு வரும் மருத்துவரிடம் ஊர்மக்கள் ஊசி போட்டுக் கொள்ள மறுக்கின்றனர்.

காபிரான ஒருத்தனெ எங்கெயிருந்தோ கூட்டீட்டு வந்திரிக்கான். ஈமானும் இஸ்லாமும் உள்ள பொம்புளியளுக்கக் கையெப் புடிச்சு ஊசி குத்த. நல்ல ஏற்பாடுதானே? எடையோடு எட இவனுக்கும் இத்திப் போலக் கையத் தொடலாமோ, பாத்தியளா ஹராம் பெறப்பே? … இவனுக்க உம்மாக்கக் கையிலேயும் தங்கச்சிக்க கையிலேயும் அந்தக் காபிர் பயலைக் கொண்டு ஊசி குத்தப்படாதா?.. பெண்கள் கேட்டனர். “அந்தத் தலை தெறிப்பான். எக்க ஊட்லே அவனைக் கூட்டிட்டு வரட்டு. பழந்தொறப்பெயேடுத்துச் சாத்துவேன்” பெண்கள் சபதம் எடுத்தனர்.
மீரான் பிள்ளையின் வீடு ஈனா பீனா கூனா முதலாளியின் அநியாயமான கடனில் மூழ்கிப் போய் பெண், பிள்ளைகளுடன் வெளியேற்றப்படுகின்றனர். இதே போல் வெளியேற்றப்படுகிற இன்னொரு குடும்பம் மம்மாத்திலுடையது. பொறம்போக்கு நிலத்தில் தங்கும் அவர்களை அங்கிருந்தும் விரட்டியடிக்கிறது பணக்கார வர்க்கம். காசிம் கைது செய்யப்படுகிறான். மம்மாத்திலின் சிறிய மகன் பீரு தங்களை இந்த நிலைக்கு தள்ளியவர்களை பழிவாங்குவேன் என்று உறுதியளிக்கும் நம்பிக்கையுடன் நிறைகிறது புதினம்.

()

R.K. நாராயணின் ‘மால்குடி’ போல தனக்கேயுரிய உலகத்தை திறமையான சித்திரங்களுடன் படைக்கிறார் தோப்பில் முஹம்மது மீரான். இசுலாமியர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை உறுத்தாமல் புதினத்தின் ஊடாகவே பாத்திரங்களின் மூலம் விமர்சிக்கிறார். ரகசியங்களை காக்கும் தபால்கார அம்புரோஸ், வாழ்ந்து கெட்ட நிலையிலும் மீரான் பிள்ளைக்கு உதவ நினைக்கும் ஐதுரூஸ் முதலாளி, எப்போதும் பஞ்சப்பாட்டு பாடும் முடிவெட்டும் ஆனவிளுங்கி, ஊருக்குப் புதிதாக வந்து முடியை இழந்து அவமானப்பட்டு பின்பு இறந்து போகும் அப்பாவி மம்மதாஜி, மதத்தின் பெயரால் ஊரெங்கும் ஏமாற்றித் திரியும் முஹம்மது அலிகான் இப்னு ஆலிசன், அவனை நம்பும் மக்கள்… என சுவாரசியமான பாத்திரப்படைப்புகள்.

குமரி மாவட்டத்து மண்ணின் வாசனையுடன் தமிழும் மலையாளமும் இணைந்து அரபிச் சொற்களுடன் நீள்கிற உரையாடல்கள் வாசிப்பிற்கு இடையூறாய் நிச்சயம் இல்லை. வட்டார வழக்குகள் புரிவதில்லை என்பது மேம்போக்கான குற்றச்சாட்டு. பிரியாணி உணவு வகையில் கூட மாவட்ட வாரியாய் தேடுகிற நம் மனம் வட்டார வழக்குகளை அவற்றுக்குரிய புதிய அனுபவத்துடன் எதிர்கொள்கிற பரவசத்தை மறுப்பதில் உள்ள ரகசியம் புரியவில்லை. இருந்தாலும் புரியாத அரபிச் சொற்களுக்கான அர்த்தங்கள் அந்தந்த பக்கங்களிலேயே தரப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் தேவை பல தருணங்களில் தேவைப்படாமல் உரையாடலின் தொடர்ச்சியிலேயே அவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆங்கில புதினங்களின் தயாரிப்பிற்கு இணையாக இந்தப் புதினத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறது அடையாளம் பதிப்பகம். திடுக்கிடும் திருப்பங்களை கொண்டிருக்காவிடினும் மிக சுவாரசியமானதொரு வாசிப்பனுபவத்தை வழங்கியது இந்தப் புதினம்.

suresh kannan

துறைமுகம் – புதினம் – தோப்பில் முஹம்மது மீரான்
அடையாளம் – பக்கம் 350 – விலை ரூ.175/-
This entry was posted in அனைத்தும், தோப்பில் மீரான் குறித்து and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to தோப்பில் முஹம்மது மீரானின் “துறைமுகம்”

  1. yoga சொல்கிறார்:

    அறிமுகம் படிக்கத் துாண்டுகிறது. படிப்பேன்.
    சாய்வு நாற்காலி கூனன் தோப்பு வாசித்தேன்.

  2. shiva pillai சொல்கிறார்:

    padikka thoondum arimugam.

பின்னூட்டமொன்றை இடுக