‘தைக்காப் பள்ளியிலே மினாராக்கள்’

களந்தை பீர்முகம்மது
http://www.kalachuvadu.com/issue-119/page73.asp
இதுவரை நாம் பார்த்துவந்த தோப்பில் முஹம்மது மீரானின் அதே வகையான பாத்திரங்கள்தாம் இந்நாவலிலும் இருக்கிறார்கள். அந்தக் கலப்பு மொழியின் இனிமையும் அந்த மண்ணின் வாசனையும் மாறவில்லை. அவருடைய கதா பாத்திரங்களின் பெயர்கள் சுத்தமாக வருவதில்லை; கொச்சையான பேச்சு வழக்கில் ஒருவரின் பெயரை எப்படி நாம் உச்சரிக்கிறோமோ அதுதான் அவருடைய பெயர். கவனிக்கப்படாத ஒரு கிராமத்தில் ஆரம்பக் கல்வியையும் பெறாதவர்கள். இஸ்லாத்தை அவர்கள் அறிந்துகொண்ட வகையில் உயிர் மூச்சாய்க்கொண்டிருப்பார்கள்; வாழ்க்கைச் சிக்கல்களால் அதிலிருந்து விடுபட்டுமிருப்பார்கள். சின்னத் துயரங்களுக்கும் அவ்லியாக்கள் எனப்படும் இறை நேசர்களின் நிழல்களுக்குள் தீர்வுகாணத் துடிப்பார்கள்.
தோப்பிலின் முந்தைய நாவல்களில் குடும்பம், சமூகம், பொருளாதாரம், மதம் ஆகியன பிரதான அம்சங்கள். ஆனால் அஞ்சுவண்ணம் தெரு முற்றிலும் ஆன்மீகத் தளம் சார்ந்து இயங்குகின்றது. இஸ்லாத்தின் ஆன்மீக உளவியலைத் தன் ஆழமான எழுத்துக்களால் ஊடுருவுகிறது. ஆன்மீகப் பிரிவுகளின் மோதல்களைக் கூறுகளாக வைத்து இப்படி ஒரு நாவல் இதுவரை தமிழில் வந்ததில்லை. ‘சமநிலைச் சமுதாயம்’ மாத இதழில் ஒரு தொடர்கதையாக ‘தைக்காப் பள்ளியிலே மினாராக்கள்’ என்று வெளிவந்துகொண்டிருந்தது ‘அஞ்சுவண்ணம் தெரு’ என்று மாற்றம் பெற்றுள்ளது. தை.ப.மி. என்பதே பொருத்தமான தலைப்பு. வியாபார உத்திக்காக ‘அஞ்சுவண்ணம் தெரு’ என மாறியிருக்கலாம். இஸ்லாமியத் தமிழ் மரபுக்கு மாற்றான ஓர் அரேபிய இஸ்லாமியக் கலாச்சாரத்தை வெறும் பாறையாக உருட்டிக்கொண்டு வந்து நடுவீதியில் போட்டு அழிச்சாட்டியம் புரிகிற குழுவினரின் ஆதிக்க மனம் சார்ந்த மத வன்முறையை இந்நாவல் பேசுகின்றது. ஆனால் அதற்காக ஒரு பக்கச் சார்பை இதன் படைப்பாளி கொண்டிருக்கவில்லை. இந்நாவலை உலகின் வேறெந்த மூலையிலுமுள்ள முஸ்லிம் பகுதிக்குள் கொண்டுபோனாலும் அங்கும் இந்நாவல் பொருந்தி நிற்கும். உலகமயமாதலைக் காரணமாக்கி மேலை நாடுகள் தங்கள் கலாச்சாரத்தை முன்வைத்து, நுகர்வுவெறியைப் பின்னாலிருந்து திணிக்கின்றன. அதேபோலச் சவூதி மண்ணுக்கு இஸ்லாமே ஒரு கலாச்சார ஆளுமையைக் கொடுக்கிறது. அதற்கான கருத்தியல் வடிவமே தவ்ஹீத் கொள்கைகள். இதை மனத்தில் ஏற்றியபின், இஸ்லாமியக் குணாம்சங்களின் மீது முரட்டுத்தனங்களும் ஒற்றைப் பார்வையும் படிந்துவிடுகின்றன; மார்க்க உரையாடல்களுக்கான வெளி உடைக்கப்படுகிறது; கேள்விகள் அனுமதிக்கப்படுவதில்லை. பூமியானது மனிதன் ‘வாழ்வதற்கான’ இடமும்தான் என்கிற எண்ணம் அப்படியே அழிக்கப்படுகின்றது. அப்புறம் கலையும் இலக்கியமும் எதற்கு? எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னரும் நாம் சில கதைகளைப் பிரமாதமாக எழுத முடியும். ஆனால் இக்கரு அப்படிப்பட்டதல்ல; இது ஒரு எமர் ஜென்ஸி கேஸ். வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம், ஒரு புனைவு, ஒரு சொற்றொடர்கூட இல்லாமல் அபாரமான செய் நேர்த்தியை இந் நாவல் கொண்டுள்ளது.
அஞ்சுவண்ணம் தெருவிலே பாழடைந்த ஒரு தர்காவின் உயரத்தை மீறி ஒரு வீட்டைக் கட்டலாகுமா? கட்டினால் அந்தக் குடும்பம் சீரழிந்துபோகாதா? இக்கேள்விகள்தாம் இந்நாவலின் அடிப்படை. தைக்காவைவிட உயரமான வீட்டைக் கட்டுபவர், தைக்காவில் மினாராக்களைக் கட்டி அதன் உயரத்தை அதிகரித்துவிட்டால் எல்லாம் நல்லபடியாக அமைந்துவிடும். மஹ்மூதப்பா தைக்காவை ஒட்டி நபீஸா மன்ஸில் என்ற வீட்டைக் கட்டிய ஷேக்மதார் சாகிபு, தைக்காப் பள்ளிக்கு மினாராக்கள் கட்டிக்கொடுக்காததால் வாழ்விழந்துபோனார். பாழடைந்த அந்த வீட்டையும் வாங்கிப் புதுப்பித்து, அதை ‘தாருல் சாஹினா’ எனப் பெயரும் சூட்டுகிறார் வாப்பா. (வாப்பா என்பது பெயரல்ல, ‘தந்தை’ என்கிற உறவுமுறை.) தைக்காப் பள்ளிக்கும் அந்த உடனேயே மினாராக்கள் கட்டச் சொல்லிப் பலரும் ஆலோசனைகள் கூறுகிறார்கள். வாப்பா அதை உறுதியாக நிராகரிக்கிறார். வாப்பா வஹாபி என்கிற தவ்ஹீத் குழுவைச் சார்ந்தவரல்ல. அவருக்கு ஞான இலக்கியங்களில் மதிப்பு உண்டு. மெஹராஜ் மாலையின் அத்தனை வரிகளும் வாப்பாவுக்கு அத்துபடி. அதைக் குழந்தைகளிடம் கதைகளாகவும் சொல்லிக் குதூகலம் ஊட்டுபவர். நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட மக்கா மஸ்ஜிதில் தொழுவதைவிடவும், தளர்ந்துபோய்ப் பாழடைந்து கிடந்த தைக்காப் பள்ளியில் தொழுது அதன் சுகத்தை அனுபவிப்பவர். தைக்காவில் மினாராக்கள் எழுப்பாததால் ஷேக்மதார் சாகிபு குடும்பம் நசிந்துபோனதை அவர் நம்பாததற்கு வேறு காரணங்கள் உண்டு. அதன் பொருட்டாகத்தான் சின்னப் பிள்ளைகளோடு பயத்துடன் வாழும் அவர் மகள் கெஞ்சிக் கேட்ட பின்னரும் மினாராக்களைக் கட்ட மறுக்கிறார். ஆனாலும் பல ஆபத்துகள் நிகழ்கின்றன. தைக்காவில் பாங்கு (தொழுகை அழைப்பு) சொல்லிவிட்டுத் தனியொரு ஆளாக நின்று தொழுது தைக்காவைப் பராமரிக்கின்ற மைதீன் பிச்சை மோதீன், பாம்புக்கடி பட்டு இறந்துபோகிறார். வாப்பாவின் மருமகன் நடத்திவந்த அரிசி வியாபாரம், அரசாங்கத் தடைக்கு உள்ளாகிறது; அவருடைய வருமானமும் நொடித்துப் போகின்றது. இதனால் எந்தக் கணமும் மனத்தில் கொண்ட உறுதி நசிந்து போகலாம். ஆனால் வாப்பாவை எதுவும் சாய்க்க முடியவில்லை. வஹாபி கூட்டத்தாரோ எந்த ஒரு சிறு சம்பவத்தையும் விட்டுவைப்பதில்லை. அவர்கள் சிறிய மூடநம்பிக்கைகளையும் சாடுவதன் பேரால், ஊரின் ஒற்றுமையைக் குலைத்துவிடுகிறார்கள். மதவாதங்களிலிருந்து நியாயமான காரணங்களை நாம் கண்டுபிடிக்க முடியாது (இது எதிரெதிரான இரண்டு பிரிவினருக்கும் பொருந்தும்). ஊரில் குழப்பங்கள் தொடர்வது காவல் துறையினர் உள்ளே நுழையவும் அதன் வன்முறை பெருகவும் வழிவகுக்கின்றது. ஆந்திராவில் எங்கோ குண்டுகள் வெடிக்கப்போய், அதற்கு உள்ளூரில் டீ அடிச்ச ரவூப்பையும் கோரம்பாய் விற்ற அனீபா பயலையும் போலீஸ் தூக்கிக் கொண்டுபோய்விடுகின்றது. அங்கு நடக்கிற ‘ராஜ உபசரிப்புகள்’ தாம் குண்டுகள் வைத்ததை ‘ஒப்புக்கொள்ள’ வைத்துவிடுமே! நீதிமன்றக் காவலிலிருந்து தம் காவலுக்கு அவர்களை எடுக்கும் காவல் துறை, இறுதியில் அவர்களை என்கௌண்டரிலேயே போட்டுத் தள்ளிவிடுகின்றது. உள்ளும் வெளியும், அஞ்சுவண்ணம் தெருவை அதன் கடைசி அவலம்வரைக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கின்றது. இப்படியாக அனேக அவலங்கள்.
முறையே வானுக்கும் பூமிக்குமான தொன்மங்கள், எதார்த்தங்களின் வழியே இந்நாவல் மனத்தைக் கவரும் நடையுடன் மிதந்து மிதந்து செல்கின்றது. எவை எங்கே நிகழ்ந்தாலென்ன? வட்டத்தின் மையப்புள்ளிக்கும் அதன் ஆரத்திற்குமான பொருத்தமுள்ள தூரத்திலேயேதான் எல்லாம் நடக்கின்றன. இது ஒரு அனாவசியமான இழை என்று எதையும் பிரித்தெடுத்துவிட முடியாது.
இஸ்லாத்தின் பரிபக்குவத்தை எப்படி உணர்வது, எவ்விதம் கடைப் பிடிப்பது என்பதற்குத் தோப்பில் நம்முன் நகர்த்தி வரும் உதாரணம் அந்த ‘வாப்பா’ பாத்திரம்தான். ஆனால் இந்த அம்சத்தை நாம் எளிதில் கண்டுவிடலாம் என்றாலும், மம்மதும்மாவின் பாத்திரம் நம்முன் ஒரு சவாலாகவே இருக்கும். அவள் பேச வாயெடுத்தாலே அவ்வளவுதான், எல்லாம் தகர்ந்துபோய்விடும். ஊருக்கு ஊர் மம்மதும்மாக்கள் இருப்பதை நாம் பார்க்கலாம். ஆனால் இவளுக்கு ஒரு ‘ஜின்’ துணையாக வாய்த்ததைப் போல வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. முறைகேடான பாலியல் உறவுகள் அனைத்தையும் அவள் அறிந்த வகையில் அந்த ‘ஜின்’னின் உதவி அமைந்திருக்கின்றது. அதனாலேயே, பெண்கள் மம்மதும்மாவைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவளும் வாப்பாவை ஒரு வஹாபி என்றுதான் கருதுகிறாள். வஹாபிகளின் நடமாட்டம் தைக்காவைப் பாழடைய வைப்பதும் தைக்கா பற்றிய நம்பிக்கைகளைத் தகர்ப்பதும் மட்டுமா? அதிகாரங்களைக் குறிவைத்து அரசியல் இலாபங்களையும் சுயநலத்தையும் பேணுவதாகவும் அமைகின்றது. இதுவரையிலும் கடைப்பிடித்து வந்த இலக்குகளை, ஹராமான பாதைக்குள் செலுத்தி, சமூகத்தின் மனநிலையை வக்கரிக்கச் செய்கின்றது. வாப்பாவைவிட, மம்மதும்மாவைத்தான் இவை உலுப்புகின்றன. கையறுநிலையில் நின்று புலம்புகிற மம்மதும்மா இஸ்லாமியக் கலாச் சாரத்தின் குறியீடு. இவற்றை யெல்லாம் இந்நாவல் அற்புதமாகப் பதிவுசெய்கின்றது.
நம்முடைய மூதாதையர்களின் காலத்திற்குள் நாம் திரும்பத் திரும்பச் சென்றுவரும் எண்ணிலாத தொன்மங்கள் அடங்கியுள்ளன. ஜின்கள் உலாவும் அந்த அதிசய உலகத்தில் நாம் எப்போது எந்தப் பாதையின் வழியாக உள்ளே போனோம், எவ்விதம் பூமிக்குள் திரும்பவும் வந்து சேர்ந்தோம் என்பதைக் கண்டறிய முடியாத அளவிற்குக் காலமும் வெளியும் மாய உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றன. மெஹ்ராஜ் மாலை அரங்கேற்றம், வேம்படிப் பள்ளி எழுவது, வெட்டு வத்தி மம்மேலி பாங்கு சொல்வது, திடசித்தம் வாய்ந்த வாப்பா மைதீன் பிச்சை மோதீனுடன் விண்ணுலகப் பயணம் செய்வது, தகர்க்கப்பட்ட பாபர் மசூதியைக் காண்பது, நபிகள் நாயகமும் ஜிப்ரீலும் அறிந்த அந்த மகத்தான உண்மையை ஆலிப் புலவர் தன் கவிதைகளின் உச்சத்தில் கண்டறிந்துகொள்வது… இப்படிப் பக்கம் பக்கமாய் விரியும் இந்த அற்புதங்கள், நாமும் அவற்றை அப்போது அனுபவித்துக்கொண்டிருப்பதான பரவசத்தைத் தருகின்றன. இவை எல்லாமும் நாவலின் மையத்தை நோக்கியே நம்மை அழைத்துச் செல்கின்றன. நாம் நம் கால்களால் அலைந்து திரிய வேண்டிய வேதனைகளில்லாத இடப்பெயர்ச்சிகள்.
எந்த இடத்திலும் ‘மேன்மை தங்கிய’ எழுத்து நடைகள் இல்லாமல் மக்களின் நாவையே பேனாவாக்கிக் கொண்டு தமிழ்-மலையாள-அரபு வார்த்தைகள் வெள்ளமாய்ப் பெருகிப் பரவசப்படுத்திய நாவல். இந்த நிலைக் கண்ணாடியில் முஸ்லிம் சமூகம் தன் முகம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அஞ்சுவண்ணம் தெரு (நாவல்)
ஆசிரியர்:
தோப்பில் முஹம்மது மீரான்
பக்.: 287 விலை: ரூ. 130/-
முதற்பதிப்பு: 2008
வெளியீடு:
அடையாளம்
1205/1 கருப்பூர் சாலை
புத்தாநத்தம் – 621310
எஸ் ஐ சுல்தான்
This entry was posted in அனைத்தும், தோப்பில் மீரான் குறித்து, தோப்பில் முஹமது மீரான் கதைகள் and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக